×

காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே வெடி விபத்து நடந்து 3 பேர் பலியான கல் குவாரியில் இருந்த வெடிபொருட்கள் செயலிழக்க வைக்கப்பட்டன. குவாரியை நிரந்தரமாக மூடுவது குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் கல்குவாரி உள்ளது. குவாரியின் குடோனில் இருந்து நேற்று முன்தினம் காலை சரக்கு வாகனங்களில் வெடிமருந்து ஏற்றும் பணி நடந்தது. அப்போது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இதுகுறித்து ஆவியூர் போலீசார் கல்குவாரி உரிமையாளர் சேதுராமன், வெடிமருந்து குடோன் உரிமையாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று அதிகாலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கும் கல்குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.11.5 லட்சத்துக்கான காசோலை, தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை தாசில்தார் மாரீஸ்வரி மூலம் வழங்கப்பட்டது. இதனிடையே கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கனிம வளத்துறை துணை இயக்குனர் தங்கமுனியசாமி தலைமையிலான அதிகாரிகள் கல்குவாரியில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், கல்குவாரியில் அதிகளவில் விதிமுறை மீறல்கள் உள்ளதும், குவாரிக்குள் பாறைகளை தகர்க்க 200 இடங்களில் வெடிமருந்துகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இது சம்பந்தமாக கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று கனிமவளத்துறை துணை இயக்குநர் தங்கமுனியசாமி தெரிவித்தார். முன்னதாக, வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் வெடிகுண்டு கட்டுப்பாட்டு துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்க பிரிவு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த வெடிமருந்துகளை செயலிழக்க செய்தனர்.

* வெடி விபத்திற்கு காரணம் என்ன?
ஆவியூர் போலீசார் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ‘மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல், எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறக்கியுள்ளனர். அதன் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

The post காரியாபட்டி அருகே 3 பேர் பலியான சம்பவம் கல் குவாரியில் நிபுணர்கள் ஆய்வு: வெடிமருந்துகளை செயலிழக்க வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Stone ,Department of Mineral Resources ,Virudhunagar district ,Keehauppilikundu ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி...